18/12/15

அடாத மழையிலும் விடாது

டீ, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு பஸ் ஓட்டினாங்க... அவங்களை நாம கைவிடலாமா?

அடாத மழையிலும் விடாது
பேருந்துகளை இயக்கிய சென்னை மாநகர போக்கு வரத்துக் கழக ஊழியர் களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் நினைவில் வைத்துக் கொண்டுள்ளனர்.  ஆனால்,  அரசாங்கம் மறந்து விட்டது என்கிற கதறல் குரல் பேருந்து ஓட்டத்தின் நடுவே 'தனித்து' கேட்டுக் கொண்டே இருக்கிறது.


சென்னையை மழை, வெள்ளம் புரட்டியெடுத்துக் கொண்டிருந்தபோது  4 மாவட்டங்களில் 25 டெப்போக்கள் மூலம் 3 ஆயிரம் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ( சென்னையில் இருந்து  இயக்கப்பட்ட  ஆயிரம் பேருந்துகளும் டோட்டல் டேமேஜில் இருப்பதாக தகவல்) அந்தப் பேருந்துகள் மற்றும் அவற்றை இயக்கிய ஊழியர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  புலம்பல் கேட்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சென்னை மாநகர போக்குவரத்துக கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் செயலாளர் சந்திரன், '’மழை வெள்ளம் சமயம் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பேருந்துகளை இடைவிடாமல் இயக்கினோம். அனைத்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பணிக்கு வந்தார்கள். 100 பேருந்துக்கு 125 பேர் வரை பழுது நீக்கும் சர்வீஸ் செக்‌ஷனுக்கு அவசியம் தேவை.  ஆனால், பணியில் இருக்கும் ஊழியர்களோ  வெறும் 25 பேர் மட்டும்தான். பெரியளவில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆனாலும் சாலைகளில் பேருந்துகள் பெருமளவில் இயங்கினவே...?

’’மழை வெள்ளத்தில் சரிபாதி பேருந்துகள் பாதியளவும், மீதி பேருந்துகள் முற்றிலும் மூழ்கி இருந்த நிலையிலும் பேருந்துகளை இயக்கினோம். எந்தப் பேருந்தையும் டெப்போவில் நிறுத்தி கிரீஸ் அடிக்கவோ, என்ஜின் ஆயிலை மாற்றவோ செய்யாமல் ஓட்டியதால் பேருந்துகளின் இயங்கு திறன் பாதிக்கப்பட்டு, பல பாகங்கள் செயலிழந்து போய் விட்டன.   ஆட்களும் போதவில்லை, போதிய ஆயில் உள்ளிட்ட அம்சங்களும் இல்லை. என்ஜின் ஆயிலை மாற்றி, கிரீஸ் அடிக்க ஆள் இல்லை. பணிமனைகள் வெள்ளத்தில் மூழ்கியதில் இருக்கும் பொருட்களும் வீணாகின.

லிட்டர் ஒன்றுக்கு 300 ரூபாய்க்கு குறையாமல்தான்  என்ஜின் ஆயில் விலை இருக்கிறது. என்ஜின் பாக்சை திறந்து அதில் இருக்கும் 12 லிட்டர் கொள்ளளவு என்ஜின் ஆயிலை வெளியேற்றி, புது ஆயிலை போட வேண்டும். இதே போல்தான் க்ரவுன் ஆயில், கியர் பாக்ஸ் ஆயில் என்று ஆயில் மாற்றி குறைந்த பட்சம் கிரீசையும் அடித்து பேருந்தை இயக்கினால், பிரேக் பெயிலியர் ஆகாமல், அதிக சேதமில்லாமல் குறைந்தபட்ச தற்காலிக பாதுகாப்புடனாவது பேருந்துகள் இயங்கும். இதை செயல் படுத்த மேன் பவர் என்பதும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தாமல் அப்படியே பேருந்துகளை எடுத்து இயக்கியதால் சென்னையில் ஆங்காங்கே பேருந்துகள் பல்வேறு பிரச்னைகளால் படுத்து விட்டன.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்னை நகரமே திணறுகிறது. வாகனங்கள் நத்தை போல்தானே நகர்கின்றது? அப்படியான வாகனங்களை  மீட்டுக் கொண்டு வருவதற்காக இருக்கும் ரெக்கவரி வாகனங்கள் இதை விட மோசமான நிலையில் கிடக்கிறது.

பெய்து முடித்த மழையில் கே.கே.நகரில் உள்ள பிரதான பெட்ரோல் பங்க் மூழ்கி விட்டது. தி.நகரில் பேருந்துகள் பஸ் டெப்போவில் மூழ்கி வெளியே எடுக்க முடியாமல் போய் இப்போது அவைகள் டேமேஜ் பேருந்துகளாக கிடப்பில் கிடக்கின்றன. தரமணி, வியாசர்பாடி என்று எந்த முனையில் இருந்து பார்த்தாலும் பஸ் டெப்போக்கள் பள்ளத்தில்தான் கிடக்கின்றன. இதை உயர்த்தி சீரமைக்க இதுவரை எந்த அரசும் முன் வரவில்லை!’’

நான்கு நாட்கள் இலவசமாக பேருந்து இயக்கப்பட்டதே... அதன் பொருளாதார விவரங்கள் என்ன?

பேருந்துகளை இலவசமாக இயக்கியதால் நாளொன்றுக்கு 3 கோடி ரூபாய் என்ற கணக்கில் 12 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. 1கோடியே 40 லட்சம் மக்கள் நான்கு நாட்கள்  இலவச பயணத்தில் பயன் பெற்றுள்ளனர் என்று அரசு அறிக்கை தருகிறது. அந்த தொகையை போக்குவரத்துக் கழகத்துக்கு அரசு வழங்காதவரை அது போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டக் கணக்கில்தானே வந்து சேரும்.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பேரிடர் காலத்தில் பேருந்து ஓட்டியதற்காக எந்தவொரு சலுகையையோ, ஊக்கத் தொகையையோ அரசு இதுவரை கொடுக்கவில்லை.




போக்குவரத்து கேன்டீன்களும் மூழ்கிக் கிடந்ததால் பத்து நாட்களும் டீ, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டுவிட்டு பேருந்துகளை இயக்கினார்கள் போக்குவரத்து ஊழியர்கள். பேரிடர் காலத்தில் காலநேரம் பார்க்காமல் வேலை பார்த்த ஊழியர்கள் மீது அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்!” என்று ஆதங்கத்துடன் முடித்தார்.

அடாது மழையிலும் விடாது பணிபுரிந்தவர்களை அரசு கைவிடலாமா?

- ந.பா.சேதுராமன்


http://www.vikatan.com/news/tamilnadu/56511-government-neglects-demandstransport-staffs.html?artfrm=related_article

 (18/12/2015)  : 13:30

 Government neglects the demand of transport staffs
who worked during Floods

கருத்துகள் இல்லை: