31/1/17

வேலைநிறுத்த நோட்டீஸ்

போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த நோட்டீஸ்
அனைத்து சங்க கூட்டமைப்புத் தலைவர்கள் அறிவிப்பு
சென்னை, ஜன.30-

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 1 அன்று வேலைநிறுத்தநோட்டீஸ் அளிப்பது என்றும் 15 நாட்களுக்குள் நிர்வாகம் அழைத்துப்பேசாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குவது என்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டம் திங்களன்று (ஜன. 30) சென்னையில் தொ.மு.ச.பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் தலைமையில் நடந்தது. பின்னர் மு.சண்முகம், அ.சவுந்தரராசன் (சிஐடியு) உள்ளிட்ட தலைவர்கள் செய்தி யாளர்களிடம் கூறியது வருமாறு:
ரூ.5000 கோடி எங்கே?
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் அரசின் கொள்கைப்படி செயல்படுவதால் கழகங்களின் இயக்கச் செலவுக்கும், வருவாய்க்குமிடையே ஏற்படும் இழப்பிற்கும் அரசின் கொள்கையே காரணமாகும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை செலவுசெய்ய அரசுக்கு எந்தவொரு அதிகாரமுமில்லை. இச்சூழலில் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.5000 கோடியை அரசு எடுத்து கழகங்களின் அன்றாடச் செல விற்கு பயன்படுத்தி விட்டு தற்போது பணம் வழங்க இயலாது என்று கூறுவது அரசு மீது பொதுமக்களும் தொழிலாளர்களும் வைத்துள்ள நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது. எனவே தொழிலாளர்களின் பணத்திற்கு அரசு உறுதி அளிக்கவேண்டும். வரவுக்கும், செலவிற்கும் இடையிலான வித்தி யாசத் தொகையை அரசு வழங்கவேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அநீதி
போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்கும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் நிதி வழங்காமலும், போக்குவரத்துக் கழகங்களிடம் வரி, வட்டி போன்றவைகளைத் தொடர்ந்து வசூலிப்பதும் போக்குவரத்துக் கழகங்கள் அடைந்துள்ள பாதிப்புகளை காரணம் காட்டி தொழிலாளர் நலன்களை மறுப்பதும் சரியல்ல. ஓய்வுபெற்ற சுமார் 65 ஆயிரம் ஊழியர்களுக்கு பல்வேறு நிலுவைகள் பாக்கி வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை ஓய்வுக்குப் பின் அலைக்கழிக்கப்படுவது நியாயமற்றதாகும்.ஓய்வூதிய நிதியை முறையாக கையாளாமலும், கடந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட படி ஓய்வூதியத்திற்குத் தேவைப்படும் நிதி வழங்காமலும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பணியில் உள்ளவர்களிடம் மாதந்தோறும் ரூ.150 பிடித்தம் செய்த பின்னரும் ஓய்வுகால சேமநலத்திட்டம் மூலம் பயனாளிகளுக்கு பணம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் வழங்கவேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும், 1.04.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர் களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, தற்போதைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
தயாராவீர்!
சேமப்பணியாளர்-தினக்கூலி ஊழியர் களின் தினஊதியம் ஒப்பந்தப்படியும் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படியும் மறுநிர்ணயம் செய்யவேண்டும், ஒப்பந்தத்திற்கு நேர்மாறாக பேருந்து சேதாரம், டயர் சேதாரம் ஆகியவற்றுக்கு சம்பளப் பிடித்தம் செய்வதை நிறுத்தவேண்டும். வயது கடந்து ஓடிக்கொண்டி ருக்கும் பேருந்துகளை முறையாக உதிரிபாகம் வாங்கி பராமரிக்காததால் பழுதாகிறது. அதனைக் காரணம் காட்டி தொழில் நுட்பப் பிரிவினர், ஓட்டுனர்களுக்கு கண்மூடித் தனமான தண்டனை வழங்கக்கூடாது. பரிசோதனை ஆய்வாளர், ஓட்டுனர் பயிற்சிஆசிரியர்களை ஒப்பந்தப்படி மேற்பார்வை யாளர் எனஅறிவித்து, தரஊதியம் ரூ.4300 ஒப்பந்தப்படி நிர்ணயம் செய்யவேண்டும். ஒப்பந்தத்திற்கு மாறாகவும், தொழிலா ளர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையிலும் அரசாணை மூலம் முறையற்ற வகையில் தர ஊதியம் நிர்ணயம் செய்துஏற்கனவே பெற்றுவந்த ஒப்பந்த பலன்தொகை நிறுத்தப்பட்டுள்ளதை சரிசெய்யவேண்டும். அனைத்து கிரேடுபே வித்தியாசங்களும் சரிசெய்யவேண்டும். அதேபோல் புதிய தொழில்நுட்ப ஊழியர்கள் மேற்கல்வி படிப்பதற்கு தடைவிதித்து பிறப்பித்த அரசாணை சரிசெய்யவேண்டும்.பஞ்சப்படி நிலுவை, விடுப்புச் சம்பளம்உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்குவதுடன் கடந்தகால ஒப்பந்தங்கள் அமலாவதையும் உறுதிப்படுத்தவேண்டும். இவையனைத்தும் சரிசெய்து தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையின் மீது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகளை அரசு தீர்க்க வலுவான போராட்டங்களுக்கு தயாராகவேண்டுமென தொழிலாளர்களை கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது தொமுச, சிஐடியு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப், தேமுதிக, பி.டி.எஸ், எம்எல்எப், ஏ.ஏ.ஏல்.எப், டி. டபிள்யு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் மத்திய தலைவர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை: