21/7/05

2005 ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஊதிய உயர்வு தொடர்பாக அரசு இன்றுபேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய நிர்ணய ஒப்பந்தம் கடந்த 1998ம் ஆண்டு போடப்பட்டது. அது 3ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

 
 புதிய ஊதிய நிர்ணயம் குறித்த பேச்சுக்கள் கடந்த 2001ம் ஆண்டே நடந்திருக்க வேண்டும். ஆனால் பேச்சு நடத்த அரசு முன் வரவில்லை. ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது அரசு கடும்நடவடிக்கை எடுத்து வந்தது. இந் நிலையில், 2 மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில் உடனடியாக ஊழியர் சங்கப்பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன் வந்தது. அதன்படி இன்று பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
    சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகவளாகத்தில் (பல்லவன் இல்லம்) இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. போக்குவரத்துத் துறைச் செயலாளர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளும், 16 தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
    முன்பெல்லாம் அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஒட்டுமொத்தமாக கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் இம் முறை ஒவ்வொரு தொழிற்சங்கத்தையும் தனித் தனியாக அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொழிலாளர்கள் இடையிலும் சங்கங்கள்இடையிலும் சிண்டு முடித்துவிடவும், தொழிலாளர்களைப் பிரிக்கவுமே இவ்வாறு தனித்தனியாக அரசு அழைத்துப் பேசுவதாகஅவை கூறியுள்ளன.
    இதுகுறித்து கற்பூர சுந்தரபாண்டியன் கூறுகையில், இதற்கு முன்பு குறிப்பிட்ட சில சங்கங்களை மட்டுமே அழைத்துபேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடுவார்கள். பேச்சுவார்த்தைக்கு வராத சங்கங்களும் கூட இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலை இருந்தது. உதாரணத்திற்கு கடந்த 1998ம் ஆண்டு (திமுக ஆட்சிக்காலத்தில்) 4 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மட்டுமே பேச்சுவார்த்தைக்குஅழைக்கப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசு அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிரும்பியதால் அனைவருக்கும், சம வாய்ப்பு அளிக்க விரும்பியதால், தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: