29/7/10

போக்குவரத்துக் கழகங்களை அரசுத் துறையாக்க வலியுறுத்தல்

  திருச்சி, ஜூலை 27:  தமிழகத்திலுள்ள போக்குவரத்துக் கழகங்களை இணைத்து அரசுத் துறையாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனம் அரசை வலியுறுத்தியுள்ளது.


     இந்த சம்மேளனத்தின் சார்பில், 2010-11 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க வாயில்கூட்டம் திருச்சி கன்டோன்மென்ட் புறநகர் கிளை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின்  திருச்சி கோட்டப் பொதுச் செயலர் ஆர். பெருமாள் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் வி. பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் வி. ராமமூர்த்தி, மாநில இணைப் பொதுச் செயலர் ஏ. தசரதராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   கோரிக்கையை விளக்கி மாநிலத் தலைவர் டி.வி. பத்மநாபன் பேசியது:

   போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமை, தனியார்மய அபாயம், உழைப்பிற்கேற்ற ஊதியம், பதவி உயர்வு, கருவூலத்தின் மூலம் ஓய்வூதியம் என அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசே நேரடியாக நிதி ஒதுக்கித் தர வேண்டும்.

  இவ்வாறு துறைக்கு உண்டான பிரத்யேக சலுகைகளுடன் போக்குவரத்துக் கழகங்களை ஒருங்கிணைத்து, அதை அரசுத் துறையாக்க வேண்டும். ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.

   மேலும், ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 240 நாள்கள் வேலை செய்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார் பத்மநாபன்.

   இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் ஏ. திருமலைச்சாமி, அமைப்புச் செயலர் ஆர். வெங்கிடுசாமி, பொருளாளர் எம். கார்த்திகேயன், இணைப் பொதுச் செயலர் எஸ். ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

    முன்னதாக, திருச்சி கோட்டத்தின் மாவட்டப் பிரதிநிதி சி. அரசப்பன் வரவேற்றார். திருச்சி கோட்டப் பொருளாளர் ஜி. எத்திராஜ் நன்றி கூறினார்.






thanks ;
[http://dinamani.com/edition_trichy/article1067732.ece]28 July 2010 11:06 AM IST
========================================================================

கருத்துகள் இல்லை: