27/3/13

ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஈரோடு {மார்ச்-2013}


ஈரோடு, : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில்
நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுக்குழுவின் தீர்மானங்களை மாவட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர்கள் துரைசாமி, சம்பத், மாநில தலைவர் ராகவேந்திரன் மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுச் செயலாளர் பத்மநாபன், ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு போக்குவரத்து கழகங்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கியுள்ளது. அதில் இருந்து மீட்க தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும், போக்குவரத்து கழகங்களை அரசு துறையாக்கி தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்களை ஊதிய ஒப்பந்தப்படி 240 நாட்கள் பணி முடித்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிமூப்பு அடிப்படையில் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும், கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற, இறந்து போன பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில்நுட்ப பணிகளை தனியாருக்கு டெண்டர் விடுவதை கைவிட வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு டிப்ளமோ படித்தவர்களுக்கு பொறியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், விபத்தில் சொந்த ஜாமீன் கோருவது, ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும், கூட்டுறவு சங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, ஈட்டிய விடுப்பு சம்பளம், பென்சன் கம்யூடேசன் தொகை, வைப்புநிதி கடன் போன்ற தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களில் உதிரி பாகங்களை கொள்முதல் செய்யும்போது தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பிரதி மாதம் 1ம் தேதி பென்சன் வழங்கிட வேண்டும், அரசு ஊழியர்களை போலவே ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 9, 10, 11 வது ஊதிய ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை அரசும், போக்குவரத்து கழகமும் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் வில்லியம், மாவட்ட தலைவர்கள் கோவை குப்புசாமி, திருப்பூர் சண்முகவேலு, பொதுச் செயலாளர் துரைராஜ், பெரியசாமி உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்

 [THANKS- dinakaran.com]பதிவு செய்த நேரம்:2013-03-25 10:16:40]

கருத்துகள் இல்லை: