20/1/13

டீசல் விலை உயர்வு



டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு அறிவித்துள்ள மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி, தள்ளாடி வந்த போக்குவரத்து கழகங்கள்,
மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், எட்டு கோட்டமாகவும், 21 மண்டலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம், 21 ஆயிரத்து, 625 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கோட்ட நிர்வாக இயக்குனர்கள், தங்களுடைய வருமானத்துக்குள், வரவு, செலவுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற நிதிக்கொள்கை பின்பற்றப்படுகிறது. அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், லாபம் கருதாமல், பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாலும், அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்கள், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பல ஆண்டுகளாகவே அரசு போக்குவரத்துக்கழகம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. 2011 செப்டம்பர் மாதம், லிட்டருக்கு 5.53 ரூபாய் வரை, டீசல் விலை உயர்த்தப்பட்டதே பெரும் சுமையாக கருதப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 5,700 கோடி ரூபாயாக கடன் தொகைஉயர்ந்துள்ளது.

போக்குவரத்து கழகங்கள் தவிப்பு : இந்நிலையில் தற்போது, மத்திய அரசு, டீசலுக்கு, 50 பைசா வரையும், மொத்த கொள்முதல் டீசல் விலையில், 11.91 ரூபாயும் உயர்த்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள், மொத்த கொள்முதல் அடிப்படையில், டீசல் வாங்குவதால், ஒவ்வொரு லிட்டரும், 11.91 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை, 49.06 ரூபாய்க்கு பெற்று வந்த டீசலை, இனி, 60.97 ரூபாய்க்கு பெற வேண்டியிருக்கும். நாளொன்றுக்கு பயணத்தேவைக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், 90 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது. இதற்காக, 22 லட்சத்து, 50 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையேற்றத்தால், தினசரி, இரண்டு கோடியே, 68 லட்ச ரூபாய் வரைகூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஓராண்டுக்கு, 978 கோடியே, 10 லட்ச ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலையேற்றம், மீண்டும் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே கடன் சுமையில் தள்ளாடி வரும் போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலை உயர்வு, கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால், தமிழக அரசு, மீண்டும் பஸ் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.-

thanks to dinamalar.com [19 ஜன., 2013]

கருத்துகள் இல்லை: