2/1/13

தாமதமாக சம்பளம்

ஈரோடு: போக்குவரத்து கழக, டெக்னிக்கல் பிரிவு ஊழியர்களுக்கு, கடந்த ஏழு மாதமாக, தாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து, ஈரோட்டில் நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலங்கள் உள்ளன. ஈரோடு, திருப்பூர் மண்டலத்தில் மட்டும், 18 கிளை அலுவலங்கள் உள்ளன.
டிரைவர், கண்டக்டர், அலுவலர்கள், அதிகாரிகள் தவிர, பணிமனைகளில் டெக்னிக்கல் பிரிவில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஈரோடு, சென்னிமலை ரோடு, அரசு போக்குவரத்து கழக பணிமனையில், நேற்று மதியம், டெக்னிக்கல் பிரிவு ஊழியர்கள், நுழைவாயிலில் கூடி, நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து கழக அனைத்து பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக ஒய்வுபெற்ற பணியாளர் சம்மேளன மாநில பொருளாளர் துரைசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
அமைப்புச் செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில், தமிழக முதல்வரின் அறிவிப்புகளுக்கு மதிப்பளிப்பது இல்லை. கடந்த ஜூலை மாதம், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பயணப்படி வழங்கும்படி முதல்வர் உத்தரவிட்டார்.
ஐந்து மாதங்கள் ஆன நிலையில் இன்று வரையிலும் வழங்கவில்லை. கடந்த ஆறு ஆண்டாக, ஈட்டு விடுப்பு சரண்டர் செய்தவர்களுக்கு இன்று வரையிலும், பணப்பயன் வழங்கவில்லை.
மருத்துவ செலவு, படிப்பு செல்வுக்காக, பி.ஃஎப்.,ல் கடன் கேட்டு விண்ணப்பித்தும், பணம் வழங்க மறுக்கின்றனர்.
தமிழகம் முழுவதுமாக கடந்த ஐந்தாண்டுகளில், போக்குவரத்து கழகத்தில், 35 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றனர்.
கோவை கோட்டத்தில், 10 ஆயிரம் பேர் ஒய்வு பெற்றனர். ஓய்வு பெற்றவர்களுக்கு பி.ஃஎப்., தொகை மட்டும், காலம் தாழ்த்தி காசோலை வழங்கப்பட்டது. பிற பயன்கள் இன்று வரை கிடைக்கவில்லை.
ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கிட, ஊழியர்களிடம் வசூலிக்கப்படும், தலா, 5 ரூபாய் சேமநல நிதியை, மூன்று மாதம் வரையில் இழுத்தடிப்பு செய்து வழங்குகின்றனர்.
டிரைவர், கண்டக்டர், அலுவலர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியன்று சம்பளம் வழங்குகின்றனர்.
போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் டெக்னிக்கல் பிரிவு ஊழியர்களுக்கு, கடந்த ஏழு மாதமாக, ஒரு வாரம் வரையில் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்குகின்றனர்.
போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக, நிர்வாக அதிகாரிகள் பதில் கூறுகின்றனர்.
அரசு அறிவிக்கும் பயன்கள் கிடைக்கப்பெறாமல் சிரமப்படுகின்றனர், என்றனர்.

கருத்துகள் இல்லை: