13/10/10

செயற்குழு கூட்டம் சேலம்[அக்டோபர் 12,2010,03:05 IST]



பணிநிரந்தரம் செய்யக்கோரி, போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் தொடர் போராட்டம் .


சேலம்: "சேலம், தர்மபுரி மாவட்டத்தில் 2007ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட டிரைவர் கண்டக்டர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவது' எனவும்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மனோகரன், தர்மபுரி மாவட்ட தலைவர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேலம், தர்மபுரி மண்டலங்களில் 2007ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட, டிரைவர்கள், கண்டக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 240 நாள் பணிமுடித்தவர்களை பணிநிரந்தரம், பணி எண் கொடுக்கப்படாதவர்களுக்கு பணிஎண் வழங்கப்பட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைப் போலவே, சேலம், தர்மபுரி மண்டல டிரைவர்கள், கண்டக்டர்களின் 240 நாட்கள் பணியை கருத்தில் கொண்டு, முன்தேதியிட்டு பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேம ஓட்டுனர், நடத்துனர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.முன்னதாக அரசு அறிவித்தபடி அக்டோபர் 20க்குள் தினக்கூலி, ரிசர்வ் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தினக்கூலி சேம ஓட்டுனர்களுக்கு ஊதிய ஒப்பந்தப்படி தினக்கூலியாக ஓட்டுனருக்கு 271 ரூபாயும், நடத்துனருக்கு 270 ரூபாயும் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன மாநிலத்தலைவர் பத்மநாபன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் கடந்த 2007ல் 410 டிரைவர்களும், 305 கண்டக்டர்களும், தர்மபுரி மாவட்டத்தில் 365 டிரைவர்களும், 278 கண்டக்டர்களும் பணியமர்த்தப்பட்டனர். இதுவரை அவர்களுக்கு பணிநிரந்தரமோ, பணி எண்ணோ வழங்கப்படவில்லை. இதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. தர்மபுரி மண்டலத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் கூடுதலாக உள்ளதால், பணி இடமாறுதலில் செல்பவர்களுக்கு பணிஎண் வழங்கப்பட வேண்டும் என்று நிர்வாக சுற்றறிக்கை உள்ளது. ஆனால், இன்று வரை பணி இட மாறுதலில் சென்றவர்களுக்கு பணி எண் வழங்கப்படவில்லை.எனவே, 2007ல் பணியமர்த்தப்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்களை பணிநிரந்தரம், பணி எண் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாளை ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Description: http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif




 ..====================================================================

கருத்துகள் இல்லை: