1/9/13

போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் தீர்வு என்ன??

அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள், ஒரு கிலோ மீட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உதிரிபாகங்கள், டயர், டீசல் விலை உயர்வு,

அரசுக்கு செலுத்தும் டீசல் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி, டோல்கேட் வரி,

கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றால், 7,000 கோடி ரூபாய் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையால், நிர்வாகத்தை நடத்த முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் உரிய சலுகைகளை பெற முடியாமல் தவிப்பதால், போக்குவரத்து கழகத்தை, அரசுத்துறையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கி, பத்து கோட்டங்கள் உள்ளன. நாள்தோறும், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.40 லட்சம் தொழிலாளர்கள், இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.மக்களின் சேவைக்காக, லாப நோக்கமின்றி, தினசரி, இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை புரிகிறது. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு, 23 ரூபாய் என்றால், கிடைக்கும் வருவாயோ, 18 ரூபாய் மட்டுமே. ஐந்து ரூபாய் நஷ்டத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தியபோதும், முழுமையான இழப்பை சரிசெய்ய முடியவில்லை. இந்த நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது,டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்கள் தான்.

நிரந்தரம்:
மாதந்தோறும், 1ம் தேதி சம்பளம் வழங்கப்படுவதில்லை. பஞ்சப்படியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டபோதும், வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர்.கடன், விடுப்பு சரண்டர், குழந்தை படிப்பிற்கான உதவித்தொகை, தையல் கூலி உள்ளிட்டவற்றை, ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைத்துள்ளதால், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. 240 நாள் பணியாற்றியிருந்தால், அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, ஆண்டுகணக்கில் நிரந்தரம் செய்யப்படாமல் வைத்துள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், டிரைவராக இருந்தால், 504 ரூபாய், கண்டக்டராக இருந்தால், 497 ரூபாய், தற்போதைய நிலவரப்படி வழங்கவேண்டும். ஆனால், 239 ரூபாய் கொடுத்து, அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால், அரசு போக்குவரத்து கழகங்கள் முடங்கிப்போகும். இவற்றில் இருந்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற, அரசுத்துறையாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மாநிலம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பணியாளர் சம்மேளனம் சார்பில், அரசுத்துறையாக்க வேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: