3/1/15

தட்டு ஏந்தி நூதன போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் தட்டு ஏந்தி நூதன போராட்டம்


ஈரோடு, : சம்பளம் வழங்காததை கண்டித்து ஈரோட்டில் போக்குவரத்து ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் நடத்துனர், ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் 1ம் தேதி சம்பளம் வழங்கப்படுவது வாடிக்கை. அதன்படி, ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு 10ம் தேதிக்குள் சம்பளம் என மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது.
ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவில் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் நேற்று மாலை வரை வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஊழியர்கள் கிளை அலுவலகத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களுக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே மாதிரி 1ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக நுழைவு வாயில் முன்பாக தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது

கருத்துகள் இல்லை: