2/9/15

செப் 2– வேலைநிறுத்தம்

புதுடெல்லி, செப். 2–

அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பகுதி நேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிப்பது, மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று
நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன.

11 தொழிற்சங்கங்கள் கூட்டாக நடத்தும் இந்த வேலை நிறுத்தத்துக்கு தனியார் வாகன போக்குவரத்து சங்கங்கள், லாரி அதிபர்கள் சங்கங்கள், ஆட்டோ தொழிற்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த தொழிற்சங்கங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பல துறைகளைச் சேர்ந்த சுமார் 15 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தத்துக்கு முழு ஆதரவு இருந்தது.

அந்த மாநிலங்களில் வாகன போக்குவரத்து முடங்கியது. கடைகளும், பெரிய வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தன. வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செயல்பட வில்லை.

மும்பை, கொல்கத்தா, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களில் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்பட்டது. மும்பையில் ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை. வங்கிகள் செயல்படாததால் வங்கி பணிகள், பண பரிவர்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் வேலை நிறுத்தம் முழுமையாக நடந்ததால் தம்பானூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்களும் ஓடாததால் ரெயில் மூலம் பணிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

லாரிகள் ஓடாததால் சாலைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

கேரளாவில் வேலை நிறுத்தம் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

வங்கிகளைப் பொறுத்த வரையில் நாடு முழுவதும் 5 லட்சம் ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 45 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். சென்னையில் பொதுத்துறை வங்கிகளில் வேலை நிறுத்தம் முழு அளவில் நடந்ததால் பணபரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளும், உறுப்பினர்களும் கலந்து கெண்டனர்.

தனியார் வங்கிகள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்க வில்லை. ஸ்டேட் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இன்றைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வில்லை. இதனால் அந்த வங்கிகளில் பணிகள் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் தபால் ஊழியர்கள், வருமானவரி, கல்பாக்கம் அணுமின் நிலையம், சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் என 45 மத்திய அரசு அலுவலகங்களில் 1½ லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

ஊழியர்கள் குறைந்த அளவில் வந்ததால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் இன்சூரன்ஸ் துறையில் 1½ லட்சம் பேரும் தமிழகத்தில்10 ஆயிரம் பேரும் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் வங்கிகள், போக்குவரத்து, மின்சாரம், எரிவாயு, எண்ணை விநியோகம் உள்ளிட்ட துறைகளில் நாடு முழுவதும் இன்றைய வேலை நிறுத்தத்தில் 11 தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 15 கோடி பேர் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்ததால் நாட்டில் உற்பத்தி தொழில் வர்த்தகம், பொருள் போக்குவரத்து, பணபரிமாற்றம் போன்றவை பாதிக்கப்பட்டது. வங்கிப் பணிகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழகத்தை பொருத்தவரை தொழிற்ச்சங்கம் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் செப்.2 போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு இல்லை அதனால் போராட்டம் முழு வெற்றியடையவில்லை

Unknown சொன்னது…

தமிழகத்தை பொருத்தவரை தொழிற்ச்சங்கம் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் செப்.2 போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு இல்லை அதனால் போராட்டம் முழு வெற்றியடையவில்லை