14/5/17

பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ்நாடு
பேச்சுவார்த்தை தோல்வி.. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடக்கம்.!


அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, நாளை முதல் வேலை நிறுத்தம் துவங்கும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


13-வது ஊதிய ஒப்பந்தம், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் வைப்புநிதியான 7,000 கோடி ரூபாயை உடனே அளிக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, ஏற்கெனவே கூறியபடி நாளை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் நடைபெறும் பட்சத்தில், நாளை மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், சென்னையில், பிற்பகல் முதலே ஆங்காங்கே வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. பிற்பகலுக்குப் பிறகு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகிறது. சென்னை பல்லவன் இல்லத்தில், மாநகர பேருந்துகள் ஓடாது என பேருந்து கண்ணாடிகளில், ஊழியர்கள் எழுதி வருகின்றனர் நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

மதுரை, விருதுநகாில்  இன்று மாலை முதல் வேலை நிறுத்தம் துவங்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, பணிமனை ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கோவையில் அரசு பேருந்துகளின் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக , நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்ற  போஸ்டர் பேருந்துகளில் ஓட்டபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சங்கத்தினர் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர். கோவை மத்திய பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்துகள் மட்டுமே காணப்படுகின்றன. அரசு நகர பேருந்துகளும் குறைவான அளவிலேயே இயங்குவதால், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலும் பேருந்துகள் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தன.

அரியலூர்-அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட அறிவிப்பையடுத்து அரியலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் அரியலூர், ஜெயங்கொண்டம்  பணிமனைகளுக்கு திரும்பிகொண்டிருக்கின்றன.இப்போது குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் அரசு போக்குவரத்து  பணிமனையை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு பின்பு அவர் அளித்த பேட்டியில், " தஞ்சை மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் பேருந்து இயங்குவதற்க்கும், ஒட்டுநர் நடத்துனர்களுக்கும் முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்குவதற்கு இடையூறு செய்தாலோ மறித்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை பெரியார் நகர் பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பஸ்களும், தனியார் மினி பஸ்களும், மாட்டுத்தாவணிக்கு இயக்கப்படுகிறது.அதேபோல் வேலூரில் இருந்து தனியார் பேருந்துகள் சென்னைக்கும், ஒசூருக்கும் இயங்க தொடங்கியது.

http://www.vikatan.com/news/tamilnadu/89299-transport-staffs-discussion-with-transport-minister-mrvijayabaskar.html

Published Date : 14-05-2017 13:34:35

கருத்துகள் இல்லை: