24/7/13

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது ?

                               யார் பெற்ற பிள்ளைக்கு
                                                                                  யார் பெயர் வைப்பது ?
(போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வூதியம் பற்றி மறைக்கப்படும் ஒரு வரலாற்று உண்மை )
காக்காசுனாலும் கவர்மென்ட் காசு என்பார்கள்,” அனுபவித்தவர்கள்.  அரசுப் பணியில் ஊதியம், பணிப்பாதுகாப்பு நிச்சயம் என்பதைத்தான் அப்படி கூறுவார்கள்.  பணி ஓய்வுக்குப் பின்னும், அந்திமக் காலம் வரை, ஏன் ஈமக் கிரியை வரை வரும் ஓய்வூதியம்.  இந்த அனுபவ பாடத்தை நிஜமாக்கி வருகிறது.  எனவே தான்
1977ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஒப்பந்த காலத்திலும் பணியாளர்கள் சம்மேளனம் தொடர்ந்து இந்த ஓய்வூதியக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தது.
  ஆனால் அதை அரசிடம் நேரடியாக விவாதித்துப் பெறுவதற்கான அந்த பேச்சு வார்த்தை மேடை அரசியல் சார்பு சங்கங்களின் "ஏக போகமாக" இருந்ததால் வாய்ப்புக்கள் தள்ளிப் போய் வந்தது.

முயன்றவர் தோற்றதில்லை என்பதற்கேற்ப விடாது இந்த கோரிக்கையை தொழிலாளர் மத்தியில் விதைத்து வந்ததன் விளைவு, பேச்சு வார்த்தைக்கு ஏக போகம் கொண்டாடிய சங்கங்கள் 1992 ஒப்பந்தத்தில் ஓய்வூதியம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை (EMPLOYEES RETIREMENT BENEFIT SCHEME) அறிவித்து கையொப்பமிட்டனர்.
Ø  தொழிலாளர் மாதச் சந்தா ரூ 50 செலுத்த வேண்டும்
Ø  கழகங்கள் ஒரு முறை மட்டும் ரூ 1000 செலுத்தும்
Ø  பயன் தொகை வாரிசுக்கு கிடைக்காது
Ø  அதிகபட்சம் ரூ 750 என்ற வரையரை
ஒப்பந்தமாகியபோதிலும் ஒப்புக் கொள்ள வில்லை தொழிலாளி.  1992 செப்டம்பர் 1ம் நாள் அதிகாலை பணியாளர்கள் சம்மேளனம் முன்னிற்க மதுரையில் துவங்கிய வேலை நிறுத்தம் தென்மாவட்டங்கள் முழுவதும் பற்றியெரிந்தது, நிர்வாகத்தை நிலைகுலைய வைத்தது.  அன்று மாலையே வாரிசுகளுக்கும் இந்த திட்டம் நீடிக்கும் என்ற சரத்து சேர்க்கப்பட்டது.  ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டு தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எழுச்சி அந்த திட்டத்தை செழுமைப்படுத்தியது.  பணியாளர்கள் சம்மேளனத்தின் முன்னணி பங்களிப்பு பேச்சு வாரத்தையில் பங்கேற்காவிட்டாலும், தொழிலாளர்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தது.
கையொப்பமிட்டதோடு சரி, அந்த திட்டம் பற்றிய பின்தொடர் நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது.  விளைவு? அந்த திட்டம் 15 ஆண்டுகளுக்கு மட்டும் என்றது கழக சுற்றறிக்கை.  கையொப்பமிட்டவர்கள் கொஞ்சமும் துணுக்குறவில்லை.  பார்ப்போம் என்றார்கள்.  திட்டத்தின் நிதி சம்பந்தமான ஆய்வு கூட மேற்கொள்ளப்படவில்லை.
முடிவு, 2013ல் அந்த "ஓய்வு நலத்திட்டம்" நிறுத்தப்பட்டதாக ஓய்வூதியர்கள் மேல் ஒரு இடி விழுந்துள்ளது.
இன்றைக்கு புத்தகம் போட்டு விளக்கி அதற்கும் விலை பேசுபவர்கள், கடந்த 21 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்தொழிலாளிகளே, ஓய்வூதியர்களே நீங்களே கேளுங்கள் ஓய்வு நலத்திட்டம் என்னவாயிற்று என்று, அதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி (6 பேர்) ஒரு முறையாவது அமர்ந்து பேசினார்களாவென்று.
ஆனால், பணியாளர்கள் சம்மேளனம் தனியாக தனது ஓய்வூதிய கோரிக்கையை அதுவும் "அரசு ஊழியர் போல்" என்ற அடிப்படையில் அரசு ஊழியராக்கு என்ற கோரிக்கையின் ஒரு பகுதியாக வலியுறுத்தி தொடர்ந்து இயக்கங்களையும், முன்னெடுத்து வந்தது.
1998ம் ஆண்டு 7 வது ஒப்பந்த காலம்.  அப்போதுதான் அரசு ஊழியருக்கான 5 வது ஊதியக் குழு சிபாரிசு அறிவிக்கப்பட்டு 1996ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் முன் தேதியிட்டு அமுலுக்கு வந்தது.  40 சதமான ஊதிய உயர்வு, அதற்கு சதவீத பஞ்சப்படி.  போக்குவரத்துத் தொழிலாளி பிரம்மித்து நின்றான்.  அரசுத் துறையில் உள்ள தனது சகோதரன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் தனது கல்வித் தகுதியே இருந்தாலும் அந்த ஊதிய உயர்வு போக்குவரத்து தொழிலாளிக்கு எட்டாக் கனியாக தெரிந்தது.
காட்டாற்று வெள்ளமாய் கிளம்பினர், என்றுமே சாந்த சொரூபர்களான கொங்கு நாட்டு பணியாளர்கள், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சியென அலையலையாய் வீறிட்டெழுந்தது அரசு ஊழியராக்கு என நிரந்தர தீர்விற்கான கோரிக்கை.  1983 தொடங்கி தொழிலாளர் மத்தியில் விதைத்து வந்த பணியாளர்கள் சம்மேளனத்தில் சங்கமித்தனர்.  உருவானது ஒரு மாபெரும் தொழிலாளர் படை. போராட்டங்கள் வெடித்தது.  வழக்கும் தொடுக்கப்பட்டது.  நீதிமன்றமும் நியாயம் உணர்ந்து, அனுமதி கொடுக்க, தமிழக தொழிலாளர் வரலாற்றில் முதன் முறையாக நடந்த ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர்கள் ஆதரவுடன் சம்மேளனம் பேச்சு வாரத்தைக்கு சென்றது.
Ø  ஏழு ஒப்பந்தத்தில் பெறாத அடிப்படை ஊதிய உயர்வு 9 சதவீதம்
Ø  அரசு ஊழியர்களுக்கு அதிகமான ஆண்டு ஊதிய உயர்வு
Ø  சீனியர், ஜூனியர் ஊதிய முரண்பாடு நீக்க பஞ்சிங் இன்கிரிமென்ட்
Ø  அரசு ஊழியர்களுக்கு நிகரான விடுப்புகள்
எல்லாவற்றிற்கும் மேலாக
"ஓய்வூதியத் திட்டம்". ஒப்பந்தத்தை மோசடி என்றனர், கையொப்பமிட்டவர்கள் துரோகிகள் என்றனர்.  மண்ணைப் பிசைந்து பாண்டம் செய்வது போல், அரசு ஊழியர் போல் ஒரு ஓய்வூதியத் திட்டத்தை தயார் செய்து கொடுத்த ஒரே சங்கம் பணியாளர்கள் சம்மேளனம்.  கடைசி வரை ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவர்கள் எழுதினார்கள்
"இந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடி, அரசுக்கு தொழிலாளர்கள் பணத்தை வாரிக்கொடுத்து விட்டார்கள்.  அரசுக்கு ஒரு லாட்டரிதான்"
என எழுத்து துவேஷ‌ம் செய்ததோடு, தொழிலாளர்கள் யாரும் இந்த திட்டத்திற்கு விருப்புரிமை கொடுக்க வேண்டாம் என பலமாக பிரச்சாரம் செய்து சுமார் 14 சதவீத அப்பாவி தொழிலாளர்களை திசை திருப்பினர்.
அதிலும் பணியாளர்கள் சம்மேளனம் தலையிட்டது.  அமைச்சரிடம் முறையிட்டு விருப்புரிமை கொடுக்காவிட்டாலும், திட்டத்திலிருந்து விலக்கமாட்டார்கள் என உத்திரவாதம் பெற்றதும் சம்மேளனமே.
ஆனாலும் தொடர்ந்தது வசைபாடல்.  திட்டத்திற்காக வருங்கால வைப்பு நிதி அனைத்தும் கொள்ளை போகின்றது என்றனர்.  ஆனால் அது ஓய்வூதியம் ஒப்படைப்பில் (கம்யுடேசன்) சமமாகும் என்றோம். நடந்தது.
ஓய்வூதிய நிதியத்திற்கான நிதியாதாரம் இல்லை எனவே மிக விரைவில் ஓய்வூதிய பட்டுவாடா நின்று விடும் என்றனர்.  மேலும், நிதியத்திற்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்றனர்.  சேவைத்துறையில் நிதி நெருக்கடி தவிர்க்க முடியாதென்றும், அதனால் ஓய்வூதியம் தடைபடுகிறது என்பதை தவிர்த்து வேறு எந்த வகையிலும் இந்த திட்டம் அரசு ஊழியர் திட்டத்திற்கு வேறுபட்டதில்லை.  நிதி நிலை நிச்சயத்திற்கு ஒரே வழி, அரசுத் துறையாக்குவதுதான் என்று அன்றும் கூறினோம், இன்றும் கூறுகிறோம்.
ஆனால் 2002ல் வந்த புதிய அரசு அரசு செயலர் கற்பூரசுந்தர பாண்டியன் என்ற அதிகாரியின் தவறான வழிகாட்டலால், ஓய்வூதியத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்கியது.
போராட்டங்களைத் தொடர்ந்து முதலில் வழக்கு தொடர்ந்தது (நீதிப் பேராணை மனு எண் 15029/2003) பணியாளர்கள் சம்மேளனம்.  அதை உறுதி செய்கிறது அரசுக் கடித எண் 67 நாள் 06/06/2003.
"2. Aggrieved by these orders, the Tamil Nadu Government Transport Corporation Staff Federation filed W.P.No.15029/2003 in the High Court, Madras.  Similar writ petitions have be filed some other Trade Unions also"
டெல்லி வரை சென்றது சம்மேளனம்.  மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆணித்தரமாக சொன்னது இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட முடியாது என்று.  மேலும் வருமான வரி விலக்கும் ஆந்திர- கேரள அரசு மீது உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் நகலை அமைச்சர் முன்னிலையில் அரசு செயலரிடம் சமர்ப்பித்தோம். மீண்டும் முயற்சி தொடர்ந்தது.  தாராஷா என்ற தணிக்கை/நிதி ஆலோசனை  குழுமம் உதவியுடன் 2010ம் ஆண்டு விதி விலக்கும் வாங்கப்பட்டது.
அப்போதும் சேற்றை வாரி வீசினார்கள். "கையூட்டு" கொடுத்து வரி விலக்கு வாங்கப்பட்டது என்றனர்.  நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வழக்கறிஞர்களுக்கு கொடுக்கும் "(Fees)கட்டணம்" அவர்களது அகராதியில் கையூட்டு. போலும்  அதனால்தான்  தணிக்கையாளர்கள் / நிதி ஆலோசகர்களுக்கு கொடுத்த கட்டணத்தைக் கூட கையூ்ட்டு என்று பிரச்சாரம் செய்தனர்.
எல்லா வகையிலும் அவர்களது பிரச்சாரம் பலவீனமானதை பார்த்து 2007 ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதை சாதகமாக்கிக் கொண்டு "ஓய்வூதிய சீரமைப்புக் குழு" அமைத்தனர்.  ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை, அதனால் அந்த குழுவில் இடமில்லை என்றனர்.  அண்ணா தொழிற்சங்கம் கையெழுத்திடவில்லையே, எவ்வாறு உறுப்பினர் ஆகினர்.  அந்த குழுவில் "தொழிலாளிகளிடம் இன்னும் கொஞ்சம் சந்தா வாங்கலாம்" என்றொரு சிபாரிசு.
சம்மேளனம் மட்டுமே, ஓய்வூதியத்திற்கு திட்ட நகல் கொடுத்ததிலிருந்து, இன்று வரை ஆண்டிறுதி நிதி பற்றாக்குறையையும் ஏற்று கழகங்களோடு, இந்த திட்டத்தையும் தொடர்ந்து அரசு போல் நீடிக்க அரசே ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  01/04/2003க்கு பிறகு பணியமர்ந்த தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற டெல்லி வரை சென்று முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதையும் பணியாளர்கள் சம்மேளனம் செய்து முடிக்கும்.
Ø  முதலில் ஊனமான ஓய்வூதியம் என்றார்கள் பின் குறைப்பிரசவம் என்றனர்.    ஆனால்-
Ø  30 வருடம் பணி முடித்தால் முழு ஓய்வூதியம் அரசு போல் நமக்கும்
Ø  கடைசியாக பெற்ற அடிப்படை, தர ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் நமக்கும் அரசிற்கும்,
Ø  ஓய்வூதிய ஒப்படைப்பிற்கான கணக்கீடு இருவருக்கும் ஒன்றே
அப்படியிருக்க நிதி நெருக்கடியை வைத்து மட்டும் ஊனம் என்றால், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் உபரி நிதியிலா கையாளப்படுகிறது.  இதில் எங்கே வந்தது ஊனம்.  இது குறைப்பிரசவமா, குறை தீர்க்கும் பிரசவமா? தொழிலாள தோழர்களே, ஓய்வூதியர்களே நீங்களே சொல்லுங்கள்.
ஆனால், இன்றோ "நாங்கள் அரசே ஏற்க வேண்டும் என அன்றே சொன்னோம்" என்கிறார்கள்.  1998ல் போட்ட துண்டு பிரசுரத்தில் "அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்" என்றவர்கள், எவ்வாறு "அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்க முடியும்.  தொழிலாள தோழர்களே "கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில்" என்பது உறுதியாகிவிட்டதா?
இன்று சொல்கிறார்கள், எழுதுகிறார்கள், இந்த திட்டத்தை அரசே ஏற்க வேண்டுமாம்.  பணிபுரியும் தொழில் கூடம் கழகமாக இருக்கும் போது ஒரு பகுதி ஓய்வூதியத்தை மட்டும் எவ்வாறு அரசு ஏற்க முடியும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். வழி சொல்ல வேண்டும்.
"ஒப்பந்த காலத்தில் பேசத் தெரியாதவர்கள்" என்றும், "புரியாதவர்கள்" என்றும் பட்டம் சூட்டப்பட்டவர்கள்தான் இன்றும் கூறுகிறோம், அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடும் செய்யும் வகையில் கழகங்களை அரசுத் துறையாக ஆக்கப்பட்டாலொழிய இது சாத்தியமில்லை என்று.
இதை மறுக்க முடியுமாமாற்றுக் கூற முடியுமா?
பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லுஙு்கையா
இன்றும் 51 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள், அனைவரும் பெறுவர்.  ஆனால் அதுவும்
பாத்திகட்டி நாத்து நட்டு
பலன் எடுக்கும் வேளையிலே
நேற்று வந்த ஒருவனுக்கு
பாத்தியமாய் போனது ஏன்
கண்ணம்மா
ஓய்வூதியர்களே, புதிய தொழிலாளர்களை
விழித்தெழுங்கள்  விழிகள் கூட விலை பேசப்படலாம்

                                                                                 தோழமையுடன்
                                        தநாஅபோக   பணியாளர்கள் சம்மேளனம்,மதுரை


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஓய்வூதியம் பற்றி -மறைக்கப்படும் வரலாற்று உண்மையை வெளியிட்டமை, காலத்தின்தேவை!! நன்றிதோழரே. அன்புடன் .prabanchan