22/4/15

சாலைபோக்குவரத்து&பாதுகாப்பு மசோதாவை கண்டித்து30–ந்தேதி வேலை நிறுத்தம்.

சென்னை,
மத்திய அரசு கொண்டுவர உள்ள சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் 30–ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து மைய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் உள்ள தொ.மு.ச. பேரவை அலுவலகத்தில் நடந்தது. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் தலைமை தாங்கினார். டி.டி.எஸ்.எப், சி.ஐ.டி.யு, தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை, பாட்டாளி தொழிற்சங்கம்,  திராவிடர் தொழிலாளர் சங்கம், தொழில்நுட்ப பணியாளர் ஒருங்கிணைப்புக் குழுவினர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:–
போக்குவரத்து கழகங்கள் பாதிப்பு
போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தின் பாதிப்புகள் சம்பந்தமாக வரும் 30–ந்தேதிக்கு பின் கூடி முடிவெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட உள்ளது. அத்துட மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்திற்கு பதிலாக சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா என்ற புதிய சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்புதிய சட்டம் அமலுக்கு வந்தால் போக்குவரத்துக் கழகங்கள் இருக்காது. அனைத்து பெர்மிட்டுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்க இச்சட்டம் உருவாக்கப்படும். அரசு போக்குவரத்து மட்டுமின்றி அனைத்து சாலை போக்குவரத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
30–ந்தேதி வேலைநிறுத்தம்
மத்திய அரசு புதிய சட்டம் நிறைவேற்றுவதை கைவிடக்கோரி வரும் 30–ந்தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய பி.எம்.எஸ். எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. எல்.பி.எப். போன்ற மத்திய தொழிற்சங்கமும், மாநில அரசு போக்குவரத்து சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
இவ்வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்க வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வாயிற்கூட்டம் மூலம் வரும் 27–ந்தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்கும் இவ்வோலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
===================

கருத்துகள் இல்லை: