14/4/15

கேட்டது 50% ; கிடைத்தது 5.5%, இன்று அடையாள வேலைநிறுத்தம்.

5.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பால் அதிருப்தி:
 போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் -
 14 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு.
  போக்குவரத்து ஊழியர்களுக்கு 5.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து, 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று {14.4.2015}வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினருடன் தொழிற்சங்கத்தினர் ஏற்கெனவே 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், 6-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது. இதில், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர ராவ், நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்ட குழுவினரும்  அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தொமுச, டி.டி.எஸ்.எப், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 42 தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர், தொழிலாளர் நலத்துறை தனித் துணை ஆணையர் அ.யாஸ்மின் பேகம் முன்னிலையில் 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர் மற்றும் நிர்வாகத் தரப்பினர் கையொப்பமிட்டனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் சின்னசாமி உள்ளிட்ட 28 தொழிற்சங்க நிர்வாகிகள் கையொப்பமிட்டனர். ஆனால்      தொமுச, டி.டி.எஸ்.எப், ஏஐடியுசி, சிஐடியு, தேமுதிக, பாமக, பணியாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்களின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் வெளியேறினர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பெற்று வந்த அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் 5.5 சதவீதம் கணக்கிட்டு அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து புதிய அடிப்படை ஊதியம் 2013 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிர்ணயம் செய்து வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,350 முதல் அதிகபட்சமாக ரூ.5,941 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

இதற்கிடையே தொமுச, டி.டி.எஸ்.எப், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை தி.நகரில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், 5.5 சதவீத ஊதிய உயர்வுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. குறைந்த ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம் குறித்த நிலையான அறிவிப்பு இல்லாதது போன்ற காரணங்களுக்காக இன்று (14-ம்தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

==========================

 ஊதிய உயர்வு தொடர்பான (5.5%)ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் அதிமுக தொழிற்சங்கத் தலைவர் சின்னசாமி. அருகில் போக்குவரத்து முதன்மைச் செயலர் பிரபாகர ராவ், தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம் உள்ளிட்டோர்.


===========================

கருத்துகள் இல்லை: