17/2/15

மார்ச்-2,மீண்டும் சதியா?. சாதனையா??!!


சென்னை,

12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது தொடர்பாக மார்ச் 3-ந்தேதி அல்லது அதன் பிறகு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்து உள்ளனர்.




போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்


போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய ஒப்பந்தத்தை முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 14-ந்தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

அப்போது 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேதி உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிடில் 16-ந்தேதி (அதாவது நேற்று) வேலை நிறுத்த அறிவிப்பு தேதி வெளியிடப்படும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

உடன்பாடு

அதன்படி சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைகள் விவாதம் குறித்த சிறப்பு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் நிறைவில் 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தாவிடில் வருகிற மார்ச் 3-ந்தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்வது என்று உடன்பாடானது. பின்னர் இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து தொ.மு.ச. பேரவை தலைவர் கி.நடராஜன், சி.ஐ.டி.யூ. துணைத்தலைவர் கஜேந்திரன் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஊர்வலமாக சென்று மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரனிடம் சென்று வேலை நிறுத்தம் செய்வது தொடர்பான நோட்டீசை அளித்தனர்.

பின்னர் தொ.மு.ச. பேரவை தலைவர் கி.நடராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலை நிறுத்தம் நடத்ததிட்டம்


ஏற்கனவே பல தடவை எங்களது கோரிக்கைகளை மனுக்கள் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைத்து விட்டோம். எனவே இனியும் கோரிக்கை என்ற பெயரில் காலம் தாழ்த்துவதை தமிழக அரசு கைவிட கோரி கடந்த 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இப்போது எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாக வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்துள்ளோம். அதன்படி வருகிற மார்ச் 3-ந்தேதியோ அல்லது அதன்பிறகோ போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான அறிவிப்பை முறைப்படி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் கொடுத்து விட்டோம்.

திறந்த மனதுடன்அரசு வரவேண்டும்

இந்தநிலையில் வருகிற 2-ந்தேதி அதாவது நாங்கள் வேலை நிறுத்தம் செய்யும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாங்கள் போராட்ட தேதியை அறிவித்தவுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை தமிழக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.

அரசுடனான இந்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நிச்சயம் பங்கேற்போம். ஆனால் அரசு திறந்த மனதுடன் இந்த பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். எங்கள் கோரிக்கை நியாயமானது தான். எனவே அரசு நிச்சயம் எங்கள் கோரிக்கையை ஏற்று, 12-வது ஊதிய ஒப்பந்த குழு பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை: