12/2/15

முதல் கூட்டம் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு


ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு: அரசு அமைத்த குழுவின் முதல் கூட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அமைத்த குழுவினர், நேற்று தொழிற்சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மட்டுமே பெற்றனர். இதனால், அதிருப்தியடைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு சார்பில் நிதித்துறை கூடுதல் செயலர் உமாநாத் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் நேற்று நடந்தது. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து தொமுச, சிஐடியு,டிடிஎஸ்எப் உட்பட 11 சங்கங்களின் நிர்வாகிகள் வந்தனர். ஒரு தொழிற்சங்கத்துக்கு 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என போலீஸார் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 24-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உடனே பேச வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். எல்லா தொழிற்சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்ற பிறகே பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிப்போம் என அரசு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம், சிஐடியு தலைவர் ஏ.சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் கூறியதாவது:
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக வந்தோம். ஆனால், ‘கோரிக்கை மனு கொடுத்துவிட்டு செல்லுங்கள். பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம்’ என அரசு குழுவினர் தெரிவித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 5 மாதங்களுக்கு முன்பே தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து பொதுவான கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம்.
வேலைநிறுத்தம் முடிந்து 40 நாட்கள் ஆகியுள்ளன. அரசு குழு அமைத்து 38 நாட்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், தற்போது மீண்டும் கோரிக்கை மனுக்களை பெறுவதும் பேச்சுவார்த்தைக்கான தேதியை பிறகு அறிவிக்கிறோம் என கூறுவதும் நியாயமற்றது. ஆகவே, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்காவிட்டால் அடுத்த கட்ட முடிவை நாங்கள் அறிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பேச்சுவார்த்தை தொடர்பாக 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பினோம். 11-ம் தேதி காலை 10.30 மணி முதல் 2 மணிக்குள் கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தோம். தொழிற்சங்கங்களின் எல்லா கோரிக்கைகளையும் பெற்று, முக்கியமான கோரிக்கைகள் மற்றும் அரசின் நிதி நிலைமை ஆகியவற்றை ஆராய்ந்து அதன்பிறகே பேச்சுவார்த்தைக் கான தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்தோம். ஆனால், உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமென கூறி, தொழிற்சங்கத்தினர் வெளிநடப்பு செய்துள்ளனர்’’ என்றனர்.
  ====================

4 கருத்துகள்:

பரோட்டா சூரி சொன்னது…

அட இவனுக கள்ளான் பண்ணறாங்கப்பா!
மறுபடியும் முதலில் இருந்து
ஆரம்பியுங்கப்பு..
இப்படிக்கு
- பரோட்டாசூரி-

Unknown சொன்னது…

Unknown சொன்னது…

நமது போராட்டம் வாபஸ் பெறும் முன்பே பேச்சு வார்த்தை தேதியை முடி வு செய்திருந்தால் இந்நிலை ஏற்படுமா

பரோட்டா சூரி சொன்னது…

போராட்டம் வாபஸ் என்ற பேச்சே
கடையை சாத்திய கதைதான் ரவிக்குமார். வடிவேல் பாணியில்
இனி 11 அடிமை சிக்கிட்டான்.

போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக
அறிவித்திருந்தாலாவது. அரசுக்கு
ஒரு பயமாவது இருந்திருக்கும்.
இனியென்ன மீண்டும் -LKG;UKG-தான்.

இப்படிக்கு
- பரோட்டாசூரி-