24/2/15

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

புதுடெல்லி:
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை தொடங்குவதாக இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
ஊதிய உயர்வு கோரிக்கை:
நாட்டில் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அவற்றின் 50 ஆயிரம் கிளைகள் நாடு முழுவதும் உள்ளன. அவற்றில் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. இதை
வலியுறுத்தி, கடந்த ஆண்டு இறுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி 7–ந்தேதி நடத்துவதாக இருந்த வேலை நிறுத்தத்தை தள்ளிவைத்தனர்.
4 நாள் வேலை நிறுத்தம்
இதையடுத்து, 19 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, பிப்ரவரி 25–ந்தேதி (நாளை) முதல் 4 நாட்கள் வேலை நிறுத்தம் நடத்த வங்கி பணியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், எனவே, வேலை நிறுத்தத்தை கைவிடுமாறும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார்.
உடன்பாடு
இந்நிலையில், மும்பையில் நேற்று பொதுத்துறை வங்கி பணியாளர்கள் சங்கங்களுக்கும், வங்கி நிர்வாகமான இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், 15 சதவீத ஊதிய உயர்வை 2012–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.
மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வாபஸ்
இதையடுத்து, நாளை தொடங்குவதாக இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக வங்கி பணியாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இருப்பினும், கடந்த முறையைப் போல, இப்போதும் 17.5 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், எனவே, இம்முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் வங்கி பணியாளர்களின் தேசிய அமைப்பு துணைத்தலைவர் அஸ்வினி ராணா தெரிவித்துள்ளார்.
2 நாள் விடுமுறை
தேசிய வங்கி ஊழியர்கள் சங்க உபதலைவர் ஆர்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போது பெறும் சம்பள பட்டியலில் இருந்து 15 சதவீதம் சம்பள உயர்வு கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 1–ந்தேதி முதல் பெறுவார்கள்.
இனிவரும் காலங்களில் வங்கிகளில் பிரதிமாதம் 2–வது மற்றும் 4–வது சனிக்கிழமை விடுமுறையாகவும் மற்ற சனிக்கிழமைகள் முழு வேலை நாள்களாகவும் அனுசரிக்கப்படும். இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதால் தொழிற்சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் விலக்கி கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

...................

கருத்துகள் இல்லை: