15/2/15

மீண்டும் ஸ்டிரைக்?

 மார்ச் 3–ந்தேதி அன்றோ அதற்கு பின்னரோ வேலைநிறுத்தம்.
20 (11+9) தொழிற்சங்க
கூட்டமைப்பு அறிவிப்பு.


  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு சனிக்கிழமை
(14-2-15) நடந்தது. கூட்டத்திற்கு தொ.மு.ச.பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  டிடிஎஸ்எப்,உள்ளிட்ட 20 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.சண்முகம்,

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க அரசு முன்வராத காரணத்தினால் கடந்த ஆண்டு டிசம்பர் 28–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை வேலைநிறுத்தம் நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் தொழிற்சங்கங்களை அழைத்து பேசிய போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஏற்று வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.

கடந்த ஜனவரி 2–ந்தேதி அரசு வெளியிட்ட அரசாணையில் பேச்சுவார்தைக்கான அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்தும் பேச்சுவார்தை தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இதனால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்த உடன் அரசு கடந்த 11–ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்தது.

இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டது. அதில் கோரிக்கை மனு கொடுப்பதற்கான கூட்டம் என தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தொழிற்சங்க நிர்வாகிகளிடம் புதிதாக மனு அளிக்க அதிகாரிகள் கூறினார்கள். போக்குவரத்து கழகத்தில் இத்தகைய போக்கு இதுவரை இருந்ததில்லை.

வரும் 16–ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்பதுடன், வரும் மார்ச் 3–ந்தேதி அன்றோ அதற்கு பின்னரோ வேலைநிறுத்தம் செய்வதற்கான தேதியை அறிவிக்க 20 தொழிற்சங்க அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை என்பதால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக அரசு உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: