21/3/15

மார்ச்30: அடுத்தகட்டபேச்சுவார்த்தை.

சென்னை, மார்ச் 21

குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.


   3-வது கட்ட பேச்சுவார்த்தை

    தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ள தமிழக நிதித்துறை கூடுதல் செயலர் உமாநாத், போக்குவரத்து செயலர் பிரபாகர் ராவ் மற்றும் போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக் குனர்கள் 14 பேர் கொண்ட குழுவினர் தொழிற்சங்கங்களுடன் கடந்த 2-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்தநிலையில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து செயலர் பிரபாகர்ராவ் தலைமையில் நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் 42 போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

30-ந்தேதி நடைபெறும்:

   சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசின் பேச்சுவார்த்தை குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.

   ஊதிய உயர்வு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

  இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் சின்னசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

வைப்பு நிதி:

   கடந்த 2 கட்ட பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அவர்கள் அமல் படுத்தினார்களா? என அனைத்து தொழிற்சங்கங்களும் கேட்டு இருக்கிறோம். ஓரளவு கடந்த பேச்சுவார்த்தை சரத்துகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ஒத்துக்கொண்டார்கள். 2003-ம் ஆண்டிற்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு வைப்பு நிதி 12 சதவீதம் பிடிக்க வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாக வைத்தோம்.

   வருகிற 30-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் கோரிக்கைகளை நிர்வாகம் எப்படி நடைமுறைபடுத்தப்போகிறார்கள்? என்பதை தெளிவுபடுத்த வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

  இது தொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகி சண்முகம் கூறியதாவது:-

54 ஆயிரம் பேர் பாதிப்பு:

   கடந்த 2 பேச்சுவார்த்தைகளில் பேசியவற்றை அமல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்கள் குறித்து கடந்த கூட்டத்தில் பேசிய ஊதிய உயர்வுகளை வரும் 1-ந்தேதி முதல் வழங்க கோரிக்கை விடுத்து உள்ளோம்.

   1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தொழிற்சங்க அனுமதி, தொழிலாளர்கள் விருப்பம் இல்லாமல் அவர்கள் தன்னிச்சையாக அரசாங்க ஊழியர்களுக்கு உள்ளதை போல பங்களிப்பு ஓய்வூதியம் என்ற அரசாணையை பிறப்பித்து, அதன் மூலம் இவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்பது போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இதனால் 54 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஓய்வூதியம்:

    புதிதாக பணிக்கு வரும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியைத்தான் ஏற்கனவே ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு அரசாங்கத்தில் இருந்து ஒரு பைசா கூட கிடையாது. தொழிலாளர்கள் பங்களிப்பில் கொடுக்க கூடியதாகும். இந்த ஓய்வூதியத்தை 2 ஆகப்பிரித்து இரண்டும் பயனற்று போகக்கூடியதாக ஆக்கக்கூடாது. ஓய்வூதியத்தை கட்டாயமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

 இதற்காக 4 தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பேசி அரசுக்கு பரிந்துரை செய்து ஓய்வூதியத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது என்றும், அதன் பின்னர் வரும் 30-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது டி.டி.எஸ்.எப். நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

===========
 





===========

===========


==========


==============

=============


கருத்துகள் இல்லை: