2/3/15

இன்று ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை [இன்று 2-3-2015]தொடங்குகிறது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது.


சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் அரசு அமைத்த 14 பேர் கொண்ட குழுவினர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன. பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். இதற்கான முடிவை அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தின.

ஆனால், அதிகாரிகள் எந்தவித முடிவையும் அறிவிக்கவில்லை.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகே தேதியை அறிவிக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால், மீண்டும் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி, தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மார்ச் 3-ஆம் தேதிக்குப் பிறகு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான நோட்டீûஸ பிப்ரவரி 16-ஆம் தேதியன்று போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

இதற்கிடையே, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 2-ஆம் தேதி நடத்தப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவித்தனர்.

அதன்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அரசு அமைத்துள்ள 14 பேர் குழு முன்னிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

1 கருத்து:

Unknown சொன்னது…

இன்றைய பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பதை எதிர்பார்க்கிறேன் .