29/12/14

2வது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: குறைந்த பஸ்களே இயக்கம்!


சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தல் ஈடுபட்டுள்ளதால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், சென்னை எம்.டி.சி., கோவை, கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் எஸ்.ஈ.டி.சி. ஆகிய எட்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ், 20 மண்டலங்களும், 280 பணிமனைகளும் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 22 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 3,506 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை 200; குளிர்சாதனப் பேருந்துகள் 100 ஆகும்.

Advertisement

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை 10,500. மாவட்டங்களை தாண்டி மொத்தம் 9,500 பேருந்கள் இயக்கப்படுகின்றன. அதோடு, 900 விரைவுப் பேருந்துகளும் 2 ஆயிரம் மாற்றுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சிற்றுந்து, தொலைதூர பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 22 ஆயிரம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு 2 கோடியே 15 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் பேருந்துப் பயணத்தை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

போராட்டம்...


இந்நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29 ஆம் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.

இதையடுத்து, 2 ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் தேதி தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து, திட்டமிட்டப்படி 29 ஆம் தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

ஆனால், திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக, நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு போக்குவரத்து பணிமனை முன்பும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால், அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களை கொண்டு பஸ்களை இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

குறைவான பஸ்கள் இயக்கம்...

சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கிருந்து சென்னை திரும்ப முடியாமல், பேருந்து நிலையங்களில் தவித்தனர்.

சென்னையில் மாநகர பேருந்துகள் அதிக அளவு ஓடாததால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களை நாடி வருகின்றனர். அதேநேரம் மக்கள் அதிகளவில் ஷேர் ஆட்டோக்களை நாடி வருவதால் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் 800 பேருந்துக்கு பதில் 250 பேருந்துகளே இயக்கப்படுகின்றனர். குன்னூரில் 65 பேருந்துகளுக்கு பதில் 10 பேருந்துகளும், கோத்தகிரியில் 50 பேருந்துகளுக்கு பதில் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், கோத்தகிரி, குன்னூருக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதேபோல், விருத்தாசலத்தில் 10 பேருந்துகள், திட்டக்குடியில் 5 பேருந்துகள், மதுராந்தகத்தில் 10 பேருந்துகளும், திருச்சி, ஆத்தூர் பணிமனையில் இருந்து 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளும் பயிற்சி மற்றும் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து இயக்கப்படுகிறது.

பேருந்துகள் மீது கல்வீச்சு...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதேபோல், தென்காசியில் 2 அரசு பேருந்துகள் மீதும், திண்டுக்கல்லில் 2 பேருந்துகள் மீதும், சேலத்தில் இருந்து பெங்களூரு, திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது.

அமைச்சர் ஆய்வு...

சென்னையில் உள்ள பல்லவன் இல்ல பணிமனையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதபடி, அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று காலை 11 மணிக்குள் சென்னை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 531 பேருந்துகளும், 100 மினி பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


http://www.vikatan.com/news/tamilnadu/36686.html?artfrm=read_please


 (29/12/2014)
 12:33

கருத்துகள் இல்லை: