29/12/14

கைமாறியது போராட்டம்:தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம்

போராட்டத்தை முன்கூட்டியே தொடங்கியது ஏன்? போராட்டம் கைமாறிவிட்டது: தொ.மு.ச. பொதுச்செயலாளர் பேட்டி

போக்குவரத்து தொழிலாளர்கள் திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டு நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் 12-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக கடந்த 2-ந்தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 18, 19 மற்றும் 20 தேதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த தேதிகளில் தொழிலாளர்களுக்கு ஆப்-சென்ட் போடப்பட்டதுடன், தொழிலாளர்களின் வாராந்திர விடுமுறையில் 1 நாள் உள்பட 5 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்களின் மொத்த சம்பளத்தில் ரூ.5 ஆயிரம் வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் ஆப்-சென்ட் விவகாரம் குறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தற்போது சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை கூட்டிய பேச்சுவார்த்தையில் பொறுப்புள்ள அதிகாரிகளோ, அமைச்சரோ வருகை தராமல் தொழிற்சங்கங்களை அவமானப்படுத்துகின்ற வகையில், பேச்சுவார்த்தையில் பொறுப்புணர்ச்சியில்லாமல் அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தியளிக்காத தொழிலாளர்கள் தானாகவே முடிவெடுத்து ஒரு நாள் முன்னதாக வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இது தொழிலாளர்களின் ஒற்றுமையை காட்டுகிறது.

தொழிற்சங்கம் கையில் போராட்டம் இருக்கும் வரையில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் தொழிலாளர்கள் கையில் போராட்டம் கைமாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு நாள் தான் பொறுமையாக இருப்பார்கள். நேற்று பணிக்கு வந்த தொழிலாளர்கள் நேற்றே போராட்டத்தை தொடங்கிவிட்டனர். அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. இனியாவது அரசு எங்களுடைய கோரிக்கைக்கு உடன்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------
 




கருத்துகள் இல்லை: