28/12/14

வேலைநிறுத்தம்.அரசியல்தலைவர்கள் அறிக்கை.

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு

மார்க்சிஸ்ட் ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பழைய ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்கள் ஆன பிறகும் இதுவரையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாகவில்லை. ஊதிய உயர்வு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டுமென சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் (26.12.14) தொழிலாளர் துறை சிறப்பு துணை ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 11 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. ஒப்பந்த காலம், நிலுவைத் தொகை வழங்குவது ஆகிய பிரச்சனைகளில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றாலும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டுமென்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து எந்த உறுதியையும் போக்குவரத்து நிர்வாகம் அளிக்கவில்லை. இதனால், ஏற்கனவே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்த அடிப்படையில் வேலைநிறுத்தப் போராட்டம் 29 ஆம் தேதியிலிருந்து துவங்க இருந்தது.

ஆனால், போக்குவரத்து நிர்வாகம் போராடும் தொழிலாளர்களுடைய இம்மாத ஊதியத்தை வெட்டியதால் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் அனைவரும் இன்றே போராட்டத்தை துவக்கியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான வேலைநிறுத்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆதரிக்கிறது. 
தொழிலாளர்களுயை போராட்டத்தை உடைப்பதற்கு திருவண்ணாமலை உள்ளிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பணிமனைக்குள் புகுந்து தாக்குவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய தவறான அணுகுமுறையை மாநில அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தொழிலாளர்களுடைய ஆதங்கத்தை உணர்ந்து மாநில அரசு இன்றே அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உருவாக்கிட பேச்சுவார்த்தையை நடத்தி சுமூகமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

---------------

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்: திருமாவளவன்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு என்றும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு கழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக் குறித்து முன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடுத்துவது வழக்கம். கடந்த 1977 ஆம் ஆண்டு உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனை ஐந்தாண்டுகளுக்கொருமுறை என மாற்றுவதற்கு, தமிழக அரசு 2001 ஆம் ஆண்டு முயற்சித்தது. தொழிற்சங்களின் கடும் எதிர்ப்பால் இம்முயற்சிக் கைவிடப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைப்பெற்றப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2013 ஆகஸ்ட் மாதம் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும்.

ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அரசு இந்த நடைமுறையை தள்ளிப்போட்டு வந்தது.இவ்வாறு காலம் தாழ்த்துவதன் மூலம் ஊதிய உயர்வுத் தொடர்பானப் பேச்சுவார்த்தையை ஐந்தாண்டுகளுக்கொருமுறை என மாற்றுவதற்கு மறைமுகமான முயற்சிகளை மேற்கொள்கிறது என அய்யப்பட நேர்ந்துள்ளது.தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக இரண்டுகட்டப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

எனினும் அது தோல்வியில் முடிவடைந்தது.ஏனெனில் அரசுத் தரப்பிலிருந்து முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் ஒருவரும் அப்பேச்சுவார்த்தையில்  பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து திசம்பர் 29 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையிலும், அரசுத் தரப்பில் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது.சனவரி 30,2015க்கு பின்னர், அரசின் கருத்தைக் கேட்டப் பிறகு மீண்டும் பேசுவோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அரசின் இந்த அணுகுமுறை அனைத்துத் தொழிற்சங்கங்களை அவமதித்துள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு தொழிலாளர்களை உருட்டி மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.அரசின் இத்தகையப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுமக்களின் நலன் கருதியும்,தொழிலாளர்கள் நலன் கருதியும்,தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்கும் வகையில்,  தொழிற்சங்கப் பிரிதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும்,தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளைப் பொறுப்புடன் பரிசீலிக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஆதரிக்கும் வகையில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது. திசம்பர் 29 முதல் தொடங்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் தொழிற்சங்கமான அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி முழுமையாக பங்கேற்கும் என்பதுடன் இப்போராட்டத்தை அமைதிவழியில் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும்,பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

------------------------------

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு! முதலமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவேண்டும்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தையின் மூலம் இவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும். சென்ற 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெறாமல், கடந்த 16 மாதங்களாக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இதரப் பலன்களும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள எம்.எல்.எப். சங்கம் உட்பட 11 சங்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அதன் மீது 26.12.2014 அன்று தொழிலாளர் துறை அதிகாரியின் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று 27.12.2014 தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூகமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான்  அனைத்துத் தொழிற்சங்கங்களும் 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு செய்துள்ளன.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் தொழிலாளர்களின் போராட்டத்தினால், தமிழக மக்களுக்கு குறிப்பாக பேருந்து பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களையும், இன்னல்களையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
------------------------------
வேலைநிறுத்தத்தை நடத்தும் நிலைக்கு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை தள்ளியதே தமிழக அரசுதான்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் தொடங்குவது உறுதியாகிவிட்டது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதலே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பேரூந்துகள் முழு அளவில் இயங்கவில்லை. தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய வேலைநிறுத்தத்தை நடத்தும் நிலைக்கு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை தள்ளியதே தமிழக அரசு தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்பது காலம்காலமாக உள்ள நடைமுறையாகும். 11ஆவது ஊதிய ஒப்பந்தம் 31.08.2013 அன்று முடிவடைந்து விட்ட நிலையில், 01.09.2013 முதல் 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 15 மாதங்களாகியும் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுத்து வருகிறது.
புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதனால் பயனில்லை என்ற நிலையில் தான் நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 22ஆம் தேதி அறிவித்தன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேசும்படி அரசை கடந்த 24 ஆம் தேதி   வலியுறுத்தியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் அரசுத் தரப்பில் 2 முறை பேச்சு நடத்தப்பட்ட போதிலும், அவை அர்த்தமுள்ளவையாக இல்லை. தங்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இன்று காலை முதலே அதிகாரப்பூர்வமற்ற வகையில் வேலைநிறுத்தத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால் அரசுப் பேரூந்துகள் முழு அளவில் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை முதல் போராட்டம் தீவிரமடையும் என்பதாலும், அரசு - தனியார்  அலுவலகங்கள் திறக்கப்படும் என்பதாலும் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களில் மக்கள் முதல்வரைக் காப்பாற்ற வேண்டி யாகங்களையும், பூசைகளையும் நடத்தி தங்களின் ராஜவிசுவாசத்தைக் காட்டுவதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும் துயரம் தொடங்கிவிடுகிறது. 1991 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில்  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை வைத்து பேரூந்துகள் இயக்கப்பட்டதால் விபத்துக்களும், பழுதும் ஏற்பட்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றிருந்தால் எவ்வளவு செலவாகியிருக்குமோ, அதைவிட பல மடங்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டது. அதேபோல்  2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இதே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த போது தீபஒளித் திருநாளுக்கான ஊக்கத்தொகை 20 விழுக்காட்டில் இருந்து 8.33% ஆக குறைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, வேலைநிறுத்தத்தை முறியடிப்பதாக கூறி பள்ளி,  கல்லூரிகளின் பேரூந்துகளும், தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டன. அனுபவமில்லாத ஓட்டுனர்களைக் கொண்டு அரசுப் பேரூந்துகள் இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பேரூந்தும், வேனும் கோவில்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஏராளமான சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
தமிழக அரசின் பிடிவாதத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் மீண்டும் அதே போன்ற விபத்துக்கள் நடந்துவிடக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதாலும் அவற்றை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை அரசு தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

--------------------------------------




கருத்துகள் இல்லை: