27/12/14

திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்:

போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்: 
11 போக்குவரத்து தொழிற்சங்கங்களின்
கூட்டமைபு சார்பாக அறிவிப்பு...

பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் 29-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி 29ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி 29ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (டிச.29) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நல சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் 240 நாள்கள் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சனிக்கிழமை 2-ஆவது கட்ட பேச்சுவார்த்தையின் போது எஞ்சிய கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு வேலை நிறுத்தம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை பகல் 1 மணி முதல்
 பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது.
இதில், போக்குவரத்து நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சௌந்திரராஜன் உள்பட அதிகாரிகளும், தொழிற்சங்கங்கள் தரப்பில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு, டி.டி.எஸ்.எப்., ஏ.ஐ.டி.யூ.சி.,  தே.மு.தொ.ச, பாட்டாளி தொழிற்சங்கம்,  ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் இது குறித்து அரசிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும், வேலை நிறுத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. எனவே திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவது உறுதி என  தொழிற்சங்கங்கள்  சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: